காஃப்கா நுண்மொழி-16:

காஃப்கா நுண்மொழி-16:

   

  “கூண்டு ஒன்று பறவை ஒன்றைத் தேடிச் சென்றது”

எனது பார்வை:

உள்ளே பறவை அடைக்கப்பட்டிருந்தால் தானே அது கூண்டு?  இது ஒரு முரண் தொகை.  உள்ளே பறவை அடைக்கப்படாததால் அது தனது கூண்டு என்கிற தன்மையை இழக்கிறது.

எனது பள்ளி இயற்பியல் ஆசிரியர் ஒரு உதாரணம் சொல்லுவார்.  சைக்கிளில் பிரேக் இருக்கிறது.  அது எந்த இயக்கத்தை நிறுத்துகிறது?  அந்த பிரேக்கை கழட்டி தனியாக வைத்துவிட்டால், அது பிரேக் ஆகிவிடுமா?  அதை பிரேக் என்று நாம் சொன்னாலும், அதனால் எந்த ஒரு இயக்கத்தையும் தடை செய்ய முடியாது.  அது சைக்கிளில் இருக்கும் போது கூட, இந்த பூமியின் சுழற்சியை நிறுத்திவிடுகிறதா என்ன?

அது போல, ஒரு கூண்டு தன்னுள் அடைபட்ட பறவை ஒன்று இல்லையென்றால் அது தன் தன்மையை இழக்கிறது.  அது தன்னை நிலை நிறுத்திக்கொள்ள, ‘தான்’ யாரென்று நிறுவிக்கொள்ள பறவை ஒன்றை தேடிச் செல்கிறது.

பறவை கூட சுதந்திரமாய் பறந்து திரியும் வரைதான் அது பறவை.  சிறைப் பட்டுவிட்டால், அது உண்மையான அர்த்தத்தில் பறவையா?

ஒரு பறவையை அதன் சுதந்திர பறத்தல் காரணமாக விரும்புகிறீர்கள்.  அதை தனதாக்கிக் கொள்ள முயல்கிறீர்கள்.  அதனால் அதைச் சிறைப்படுத்துகிறீர்கள்.  சுதந்திரம் இழந்த அந்த உயிர் இப்போது ஒரு பறவையா என்பது காஃப்காவின் கேள்வி.  ஒரு பொருளை தனதாக்கிக் கொள்ளும் ஆசை அப்பொருளை அதன் சுய தன்மை இழக்கச் செய்கிறது.

ஒரு அழகான கூண்டு செய்வது என்பதே யாரையோ சிக்க வைப்பதற்கான முயற்சிதானே!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29