காஃப்கா நுண்மொழி-36

காஃப்கா நுண்மொழி-36


    முன்பெல்லாம் நான் கேட்ட கேள்விகளுக்கு ஏன் பதில் கிடைப்பதில்லை என்று புரிந்ததில்லை.  இப்போது அத்தகைய கேள்விகளை எந்த தைரியத்தில் கேட்டேன் என்றும் புரியவில்லை.  ஆனால் நான்தான் கேட்டேனா என்பதையும் நம்பமுடியவில்லை.

 

என் எண்ணம்

    இளைய வயதில், இப்படித்தான் தோன்றியவற்றை துடுக்குத்தனமாக கேட்டுவிடுகிறோம்.  பிறகு வயதும் முதிர்ச்சியும் ஏற ஏற, எப்படி இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனமான கேள்விகளை கேட்டோம் என்றும் தோன்றுகிறது.  நம் அசட்டுத்தனம் குறித்தும் ஆச்சரியப்படுகிறோம்.

    படிப்பு முடிந்த கையோடு ஒரு தனியார் அலுவலகத்தில் வேலையிலிருந்தேன். இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி இரண்டு வயதிருக்கலாம்.  ஆண்களுக்கான அறையில் நிறைய கிசுகிசுக்கள் பேசிக்கொள்வது வழக்கம்தானே.  அப்போது காமம் சார்ந்த ஒரு குறியீட்டு வார்த்தையை தெரிந்துகொண்டேன்.  அடுத்த ஒன்றிரண்டு நாளில் ஒரு நண்பன் அலுலவகத்தின் கூடத்தில் வைத்து என்னை கிண்டல் செய்துவிட்டான்.  ‘பிலக்கா பையன், இன்னம் மீசை கூட முளைக்கலை, உனக்கென்னடா தெரியும்’ என்று சீண்டிவிட்டான்.  அந்தக் கூடத்தில் ஆண்களும் பெண்களுமாக ஒரு முப்பது பேர் அமர்ந்திருப்போம்.  எதிரே என்னைவிட மூன்று வயது மூத்த, திருமணமாக ஒரு இளம், நல்ல தோழி, அமர்ந்திருக்கிறார்.   எனக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது, “எனக்கு எல்லாம் தெரியும், உனக்குத் தெரியுமா, உனக்கு ‘…………’ என்றால் என்னவென்று தெரியுமா?” என்று அந்த குறியீட்டு வார்த்தையை சத்தமாக கேட்டுவிட்டேன்.   எல்லோரும் என்னை அண்ணாந்து ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.  அந்த ஆச்சரியத்திற்குப்பின்னால் என் மேல் நான் பூசிக் கொண்ட அசிங்கம் இருந்தது புரிய கொஞ்ச நாள் ஆயிற்று.  அந்த இளம் தோழியின் பார்வை இன்னும் (35 வருடங்களுக்குப் பின்னும்) என் மனக் கண்ணில் இருக்கிறது.  அதே நண்பன் வெளியே வந்தபிறகு என்னை திட்டு திட்டு என்று திட்டித் தீர்த்துவிட்டான்.  இன்னும் கூட அது எனக்கு அசிங்கமாக இருக்கிறது.

    காஃப்காவின் நுண்மொழி எந்தவொரு உள் அர்த்தத்துடன் எழுதப் பட்டிருந்தாலும், ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு நிகழ்வு இப்படி இருக்கக் கூடும்.  அதற்குக் காரணம், இள வயதின் துணிச்சலும், அசட்டுத் தனமும், பின் அடைகிற முதிர்ச்சியுமாக இருக்கலாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29