காஃப்கா நுண்மொழி-34

காஃப்கா நுண்மொழி-34


 “தனது அலுவலகத்தின் ஒரு மூலையில் வெள்ளையடித்துவிட்டு அவன், போருக்குப் பின்னான ஒரு தளபதியைப் போல் அயர்ந்துவிடுகிறான்”

 என் எண்ணம்:

    நானும் பார்த்திருக்கிறேன்.  நான் பார்க்கிற வேலைதான் மிகுந்த கடினமானதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இருக்கிறது என்று இறுமாந்ததுண்டு.  அதே நேரம் உடன் இருக்கிற (சும்மாவே இருக்கிற) சக, கீழ் நிலை ஊழியர்களும் தங்களது வேலைதான் சிரமம் நிறைந்தது என்று அலுத்துக் கொள்வார்கள்.  சும்மா இடுப்பில் கைவைத்துக் கொண்டு மேஸ்திரி வேலை பார்க்கிற மேலதிகாரிகளும் அதே போல்தான் அலுத்துக் கொள்கிறார்கள்.

    உங்களுக்கென்ன, மாசம் பொறந்த சம்பளம், நாங்க அப்படியா ஓடியாடி உழைச்சாதான் காசு பாக்கமுடியும் என்று அலுத்துக்கொள்ளும் நண்பர்களும் உண்டு.

    வெள்ளையடிக்கிற மனிதனின் அயர்ச்சியும் நியாயமானதுதான்.  அவனது உழைப்பும் அயர்ச்சியும் யாராலும் பாராட்டப்படுவதில்லை.  ஒருவனது உழைப்பு என்று சொல்லும் போது அது போர்வீரனின் உழைப்பிற்கு இணையானதுதான்.  இருவரும் உழைக்கிறார்கள்.  ஆனால் ஒருவனது உழைப்பு எந்த மாற்றத்தையும், விளைவையும் தருவதில்லை. அவனது உழைப்பு நின்று போனாலும் கூட எதுவும் நிகழ்ந்துவிடப் போவது இல்லை.  ஆனால் போர் வீரனின் உழைப்பு பல விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.  பல வெற்றிகளையும் பல சோகங்களையும் தரக்கூடியது.  அவனோடு போரிட்ட பலர் உயிர்நீத்துப் போகலாம்.  அவர்களை மீட்டெடுக்க முடியாது.  ஒரே மாதிரியான அயர்ச்சி தருகிற உழைப்புதான் என்றாலும், உழைப்பில் இணையாக அவர்களை மதிப்பிட்டாலும், விளைவுகளின் முக்கியத்துவத்தில் இருவரும் வேறு வேறு துருவங்களில் இருக்கிறார்கள்.

    நாம் தேர்ந்தெடுக்கும் வேலையின் விளைவுகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் நாம் உணர்ந்திருக்க வேண்டும் என்பதே நாம் இந்த நுண்மொழி மூலம் புரிந்துகொள்வது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29