காஃப்காவின் நுண்மொழிகள் - என் பார்வை


புத்தக சந்தையில் யாவரும் அரங்கில் நின்று கொண்டிருந்த போது, ஜீவகரிகாலன் அப்போதுதான் வந்த Franz Kafka வின்  the Zurau aphorisms – ‘காஃப்காவின் நுண்மொழிகள்என்ற குட்டி புத்தகமொன்றை காட்டி காஃப்கா பற்றி நிறைய சொன்னார்.  மேலும் அவரின் உருமாற்றம்புனைவு குறித்தும் பேசினார்.  இரண்டு புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன்.
பழமொழி, பொன்மொழி, முதுமொழி, சொலவடை என பல ஆகுபெயர்களைத் தாண்டி, காஃப்காவின் மொழிகளுக்கு நுண்மொழிஎன்று பெயர் சூட்டியிருக்கிறார், மொழி பெயர்த்த கே. கணேஷ்ராம்.  ஒரு சொல்லின் பொருள் அதை நாம் இதுவரை எப்படி புரிந்து வந்திருக்கிறோமோ அப்படித்தான் உணர்வாகிறது.  அப்படி, இதை, நுட்பமான அல்லது நுணுக்கமான-மொழி என்று பொருள் கொள்கிறேன்.  இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் வேளை, இந்த உணர்வு வேறு மாதிரியாக மாறியும் இருக்கலாம்.
இந்த ஒரு குட்டி புத்தகத்தை வைத்துக்கொண்டு காஃப்காவை எடை போடுவது, யானையை வைத்துக் கொண்டு குருடர்கள் வரைந்த ஓவியம்தான்.  இந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்களை மட்டும் எனது கண்ணோட்டத்தில் எடுத்துச் சொல்கிறேன்.  காஃப்கா பற்றி தெரிந்து கொள்ள இணைத்தில் தேடினேன்.
காஃப்கா ஆன்மீக வாதியாகத்தான் இருந்தார் என்பதை பிரம்மராஜன் கட்டுரையில் தெரிந்து கொள்கிறோம்.  ஆனால் அவரை எக்ஸிஸ்டென்ஸியலிஸ்ட்டுகளும், சர்ரியலிஸ்டுகளும், மார்க்சிய வாதிகளும் தங்களுக்கு ஏற்றாற்போல் விளக்கம் தந்து பயன்படுத்திக் கொண்டார்கள் என்றும் சொல்கிறார்.  அதிகார வர்க்கத்தின் கிண்டல்களாகவும் அவரது நாவல்கள் பார்க்கப்பட்டனவாம்.
எழுதுவதென்பதேஇயற்கையான வழியில் வயோதிகத்தை அடைவதாகும்என்று தனது டைரிக் குறிப்பில் எழுதியுள்ளாராம்.  பலரைப் போலவும், தந்தையை ஒரு சர்வாதிகாரியாக பார்த்த அவர், தந்தையை ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராகவும இருந்திருக்கிறார்.
இணையத் தேடலில், காஃப்காவின் மரணத்திற்குப் பின் அவரது நண்பர் Max Brod இந்த 109 நுண்மொழிகளை தொகுத்திருக்கிறார் என்று தெரியவருகிறது.   தமிழில் மொழி பெயர்த்த கே. கணேஷ்ராமின் மொழி பெயர்ப்பு எனக்குப் போதுமானதாக இல்லை.  அல்லது சரியான மொழி பெயர்ப்பாகவும் இல்லை சில இடங்களில்.  ஆகவே இணையத்தில் இதன் ஆங்கில மூலத்தையும் அடுத்தடுத்து வாசிக்க வேண்டியதாகிறது.  ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் வாசித்து விமர்சிப்பது இயலாது என்பதால், தினம் ஒரு நுண்மொழி குறித்து இங்கு பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.
நுண்மொழிகளுக்கு பொழிப்புரை எழுதுவதே முட்டாள்தனம் என்கிறார்கள்.   அதே வேளை பொருள் கண்டுகொள்ள முயற்சிக்காமல் இருப்பது வாசிக்காமலே விட்டுவிடும் முட்டாள் தனத்திற்கு இட்டு சென்றுவிடும் என்றும் சொல்கிறார்கள்.  முயற்சிப்போம்.
1
“மெய்யான பாதை ஒரு கயிறை ஒட்டியே நீள்கிறது.  காற்றில் தொங்கவிடப்பட்ட கயிறல்ல, நிலத்துக்குச் சற்று மேலேதான் அது போகிறது.  கழைக்கூத்தாடி நடக்கும் கயிறுபோல அன்றி விலங்குகளைச் சிக்கவைக்கும் பொறியின் கயிறுபோலவே அது தென்படுகிறது.”
முதல் நுண்மொழியில் சொல்லப்படும்மெய்யான பாதைஎன்பது எதை குறிப்பிடுகிறது?  மெய்ஞான பாதையையா அல்லது நம்மை நம் வாழ்வு இழுத்துச் செல்லும் நிதர்சன பாதையையா?
பின்வரும் நுண்மொழிகளில் தொடர்ந்து “பாதை” ஒரு உருவகமாகவே மீண்டும் மீண்டும் கையாளப்படுகிறது.
இப்படி எடுத்துக் கொள்ளலாம், அந்தப் ‘பாதை’ நாம் சரியாக செல்ல வேண்டிய ‘வாழ்வியல் பாதை’ என்று.  அப்படிப்பட்ட பாதை, தரைக்கு சற்று மேலே, தரைக்கு இணையாக செல்லும் கயிற்றின் இணையாகவே செல்கிறது.  அந்தக் கயிறு ஆகாயத்திலிருந்து நம்மை காக்க தொங்கிக் கொண்டிருப்பது அல்ல.  ஆனால் அதன்வழி நடக்கையில் நாம் தடுக்கித் தடுமாறி அதன் மேலேயே விழுந்துவிட நேர்கிற மாதிரியான கயிறு.  அதாவது, உயரே தொங்கிக் கொண்டிருக்கிற கயிற்றில் தொங்கிக் கொண்டு, அதை விட்டு நீங்க முடியாமல் தவிக்காமல், கீழே சிறிய உயரத்தில், தடுமாறி அதன் மேல் விழுந்தும் எழுந்தும், வேண்டுமானால் பயணித்தும், வேண்டாத போது நீங்கியும் செல்லலாம், உண்மையான பாதை அப்படிப்பட்டது. 
தொடரும்...... 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29