காஃப்கா நுண்மொழி-20

காஃப்கா நுண்மொழி-20


    ஆலயங்களின் பலிபீடத்திலிருக்கிற குடுவைகளில் உள்ள படையலை குடித்து தீர்க்கின்றன அத்து மீறும் சில சிறுத்தைகள்.  இவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து நிகழ்கின்றன.  பின்னாள் இவையும் கணக்கில் கொள்ளப்பட்டு, பிறகு அதுவும் ஒரு சடங்கின் பகுதியாகிறது.

என் எண்ணம்:

இந்த நுண்மொழியை படிக்கும் போது, நமக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கிற ஜென் கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.

ஒரு ஜென் துறவியும் அவரது சிஷ்யர்களும் தியானம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு பூனை சத்தம் போட்டுக்கொண்டே குறுக்கும் நெடுக்கும் அலைந்ததால், தியானத்திற்கு இடையூறாய் இருப்பதாய் கருதி அந்த துறவி ”பூனையைக் கட்டிப்போடுங்கள்” என்று உத்தரவிட்டார்.

சில ஆண்டுகள் கழித்து அந்த துறவி இறந்து விட்டார். ஆனாலும் அந்த பூனையைக் கட்டிப் போடும் பழக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. மேலும் சில வருடங்கள் கடந்தன. அந்த பூனையும் இறந்து விட்டது. வேறொரு பூனை வரவழைக்கப்பட்டு கட்டி வைக்கப் பட்டது. பல ஆண்டுகள் கழித்து சீடர்கள்,” நம் மத வழக்கப்படி பூனையை தியான நேரத்தில் கட்டி வைக்க வேண்டும்” என நூற்குறிப்புகள் எழுதி வைத்தனர்.

இந்த நுண்மொழி ஒரு கட்டம் மேலே நகர்கிறது.  பூனைக்கு பதில் சிறுத்தை.  சிறுத்தைகள் செல்லும் இடம் ஒரு கோயில் பலி பீடம்.  பலியிடப்பட்ட உணவுகளை சிறுத்தைகள் உண்கின்றன.  அதுவே வழக்கமாகிறது.  பிறகு அதுவே சடங்காகிறது.  புலிகள் கலந்து கொண்டாலே சடங்குகள் நிறைவடைகிறது.

காஃப்கா இங்கே மிக நுட்பமான அங்கதத்தை கையாள்கிறார்.

மதமும், சிறுத்தைகளும் ஒரே படையலை உண்கின்றன.  ஆதலால் ஒரே மாதிரி நடந்து கொள்கின்றன, ஒரே அதிகாரங்களுடன்.  சிறுத்தைகள் அப்பாவிகளாய் கருதப்படுகின்றன.  எனவே அவைகளால் களங்கம் வியைது என்று நம்பப்டுகிறது.  ஆதலால், அன்பும் அமைதியுமே மதத்தின் உயரிய தத்துவம்  என்பது பிறகு வன்முறையை நியாயப்படுத்த பயன்படுகிறது.  யாரும் இரண்டாம் முறை சிந்திப்பதாய் இல்லை.  சடங்குகள் மிக இறுக்கமானவை, கண்டிப்பானவை என்று சொல்லப்பட்டாலும் அவை மிகவும் வளைந்து கொடுப்பவை என்பதே உண்மை.

பலிபீடத்தின் முன் முதல் மரியாதை செய்யப்பட காத்திருக்கின்றனர் ராஜாக்கள்.

ஆன்மீகவாதியான காஃப்கா குறித்த சிந்தனை மாறுபடுகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29