காஃப்கா நுண்மொழி-22


    “நீயே உனக்கு விடப்பட்ட சவால்,  நீயே உனக்கான பயிற்சி.  உன் களத்தில் வேறு மாணவர்கள் இல்லை.”

என் எண்ணம்:

காஃப்காவின் ஒரு சில எளிமையான நுண்மொழிகளில் இதுவும் ஒன்று.  நம்மை நாம் செதுக்கிக் கொள்வதும், நம்மை நாம் வெல்வதும், அதற்கான பயிற்சியும் முயற்சியுமே நமக்கான சவாலாக இருக்கிறது.  மற்ற பயிற்சி வகுப்புகளைப் போல் இந்த சவாலில் வேறு மாணவர்கள் இருப்பதில்லை.

சீனியர் சிட்டிசன் வரிசையில் இடம் கொடுத்துவிட்டார்கள் எனக்கு.  ஆனாலும் இன்னும் நான் என்னைக் கண்டுகொள்வதும், வெல்வதும் தோல்வியில்தான் முடிகிறது.  கண்டுவிட்டேன் என்றால் தேக்கமடைந்துவிட்டேன் என்றே பொருள்.

ஊட்டியில் வாழ்ந்த காலத்தில் ஒரு சிறிய காட்டு கோவிலில் நின்று கொண்டிருந்தேன். சனீஸ்வரனுக்கு பூஜை நடந்து கொண்டிருந்தது.  சட்டென்று ஒரு பெண் கீழே விழுந்தாள்.  பாம்பு போல் நெளிந்தாள், உஸ் உஸ் என்று வாயால் ஊதி, ஊர்ந்து கருவறை நோக்கி நகர்ந்தாள்.  சாமி சிலையருகே சென்று விழுந்து வணங்கிவிட்டு, அப்படியே திரும்பினாள்.  பூஜாரி, “அம்மா, நாகம்மா, அப்படியே எல்லோருக்கும் நல்லது சொல்லிட்டுப் போம்மா” என்றார்.  குனிந்தவர்களுக்கு ஆசிர்வதித்து வெளியே நகர்ந்தாள்.  “ஐயா வந்திருக்காரு, பிரச்சினையோட, அருள் வாக்கு சொல்லுமா” என்று என்னைக் காட்டினார்.  “சார், குனிஞ்சு கீழே உட்காருங்க” என்றார்.

    நாகரீகம் கருதி மறுப்பு சொல்லாமல் கீழே அமர்ந்தேன்.  “பிரச்சினையா, வாழ்க்கையில பிரச்சினையா?”

    “ஆமா..”

    ஊர்ந்து வந்து மூஞ்சியில் ஊதினாள், முகம் சுழித்து திரும்பிக் கொண்டேன்.

    “உனக்கு நீயே பிரச்சினை, பிரச்சினைக்கு காரணமே நீ தான்” – சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள்.

    ஆச்சரியமாய் இருந்தது.  இருவது வயது உள்ள ஒரு சின்னப் பெண், அதற்குள் ஜென், ஓஷோ முதலியவற்றை படித்து தெளிந்து விட்டாளா?  அல்லது உண்மையிலேயே கடவுள் வந்திறங்கி மனதை படித்து சொல்லிவிட்டதா?

    இன்னும் நான் என்னை அறியாமலேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேனோ இவ்வுலகில்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29