காஃப்கா நுண்மொழி-26

காஃப்கா நுண்மொழி-26


    “ஒளிந்து கொள்வதற்கான மறைவிடங்கள் ஏராளமாய் இருக்கின்றன.  ஆனால் இரட்சிப்பு ஒன்றே ஒன்றுதான்.  இரட்சிப்பிற்கான சாத்தியங்கள் மறைவிடங்களைப் போல் ஏராளம்.  கடைவழிக்கான பாதை ஏதுமில்லை, ஆனால் அப்பாதை தயக்கங்களால் ஆனாது”.

என் எண்ணம்:

        பாதை குறித்த முந்தைய நுண்மொழிகளை நினைவுபடுத்தி இதற்கு பொருள் தேட வேண்டியுள்ளது.  குறிப்பாக, 15வது நுண்மொழி, சருகுகளால் மூடப்படும் பாதை.

         கடைவழிக்கான பாதையில் முயற்சியை கைவிட்டு நாம் ஒளிந்துகொள்வதற்கான இடங்கள், காரணங்கள், காரணிகள் நிறைய உள்ளன.  நம்மை திசை மாற்றும் பொய்யான பாதைகள் அவை.  கடைவழிக்கு உண்மையான பாதை ஒன்றே ஒன்றுதான்.  நின்று கொண்டிருக்கும் இடத்தில் உன் பாதங்களின் அளவே தெரியும் பாதைதான் தற்போதைக்கு உண்மை (நு.மொ.25) கடைவழிக்கு பாதை ஏதுமில்லை.  அதாவது அப்பாதை சருகுகளால் மூடப்பட்டிருக்கிறது.  சருகுகளை நீக்கி அப்பாதையை கண்டுணர வேண்டியுள்ளதால், அப்பயணம் தயக்கங்களால் நிரம்பியுள்ளது.

    இங்கு நான் ‘கடைவழி’ என்று குறிப்பிடுவதை காஃப்கா தன் மூலத்தில் என்னவென்று எழுதியிருக்கிறார் எனப் புரியவில்லை.  ஆங்கில மொழி பெயர்ப்புகளில், ஒன்றில்  “escape” எனவும் மற்றொன்றில்   “salvation” எனவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

    மதம் சார்ந்த கூறுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, நம் வாழ்க்கையில், நமது வாழ்க்கை லட்சியங்கள் குறித்த முயற்சிகளோடு இதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.  ஒரு லட்சியப் பயணத்தில், அதிலிருந்து விலகிவிட, தப்பித்துக் கொள்ள மனம் ஆயிரம் காரணங்களைத் தேடும்.  ஆனால் ஒரே ஒரு காரணம் மட்டுமே நம்மை லட்சியத்தை நோக்கி நகர்த்தும்.  தயக்கங்களால் நமது பாதை மூடிக் கொள்ளும் போது எந்த பாதையும் இல்லாதது போலும் தோன்றும்.  ‘தப்பித்துக் கொள்ளுதல்’ நம்மை லட்சியத்தை அடையவிடாது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29