காஃப்கா நுண்மொழி-39

காஃப்கா நுண்மொழி-39

தீமைக்கான விலையை ஒருவன் அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. ஆனாலும் அவன் தொடர்ந்து முயன்று கொண்டேதான் இருக்கிறான்.

மாவீரன் அலெக்சாண்டர் தன்னுடைய இளமைக்கால வெற்றிகள், அவன் உருவாக்கிய பிரம்மாண்டமான போர்ப்படை, இந்த உலகை மாற்றி விடுவதற்கான ஆற்றல் கொண்ட உத்வேகம், யாவும் இருந்தும்கூட அவன் ஹெலஸ்பாண்ட் என்ற கால்வாயை கடக்காமல் தனது பயணத்தை நிறுத்தி இருப்பார் என்பது யூகிக்கத் தக்கது. அது அவனுடைய பயத்தினால் அல்ல, திடமற்ற   முடிவினால் அல்ல, பலவீனத்தினாலும் அல்ல ஆனால்  அவனுடைய சோர்ந்த கால்களினால் கூட இருக்கலாம்.”

என் எண்ணம்:

தீமைக்கான விலையை நாம் அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்க முடியாது என்று சொல்லும்போது பாவத்தின் சம்பளம் மரணம் என்கிற பைபிள் சொற்றொடர் நினைவுக்கு வருகிறது. அப்படி என்றால் தீமைக்காண விலை என்பது மொத்தமாக நாம் கொடுக்கப் போகிற மரணம் என்று பொருள்படுகிறது. ஒவ்வொரு தீமைக்கும் அவ்வப்போது விலைகொடுத்து நாம் அதை சரி செய்துவிட முடியாது, முதலிலேயே மொத்தமாக கொடுப்போம் என்று காஃப்கா சொல்கிறார்.  அதாவது ஒருவன் தீமையின் பயனால் தொடர்ந்து மூழ்கிக் கொண்டிருக்கிறான் என்பதைவிட, தீமையின் தொடக்கத்திலேயே முழுவதுமாக மூழ்கிவிட்டான், மற்றவையெல்லாம் பின்விளைவுகளே என்று பொருள் கொள்ளலாம்.

    சரி, இந்த நுண்மொழியில் அலெக்சாண்டர் குறித்து என்ன சொல்கிறார்?  மாவீரன் அலெக்சாண்டர் மாசிடோனியாவிலிருந்து கிழக்கு நோக்கி படையெடுத்து வருகிற வழியெல்லாம் சாம்ராஜ்யங்களை வென்று தனது சாம்ராஜ்யத்தை விரிவாக்கிக் கொண்டே வருகிறார்.   பல ஆண்டுகள் கடந்துவிட்ட அவரது பயணத்தில் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன் அவர் ஜீலம் நதிக்கரையில் இந்திய மன்னன் போரஸுடன் போரிட்டு வெல்கிறார்.  ஹைடஸ்பஸ் என்ற நதியை கடக்கும்முன் அலெக்சாண்டருடைய படையினர் சோர்வுற்று வீடு திரும்பும் கோரிக்கையை வைத்து கலகம் செய்கின்றனர்.   போரஸை வென்றதாக வரலாறு இருந்தாலும், அலெக்சாண்டர் ஹைடஸ்பஸ் நதியை கடக்காமல் திரும்பிவிட்டதாகவும் குறிப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள்.   இந்த ஹைடஸ்பஸ் நதிதான் ஹெலஸ்பாண்ட் நதியா என்று உறுதிசெய்யவும் குறிப்புகள் இல்லை.

    திரும்பி செல்லும் மன்னன் அலெக்சாண்டர்  பாபிலோன் என்னும் நகரை அடையும் போது நோய்வாய்ப் பட்டு இறந்து போகிறான்.   உலகையே வெல்லும் பேராற்றலும், பேராசையும் கொண்டிருந்த அலெக்சாண்டர், தன் நாடு திரும்பாமல், அங்கிருந்து ராஜ்ய பரிபாலனம் செய்யாமல் தன் 31வது வயதிலேயே இறந்து போகிறான்.  பனிரெண்டு ஆண்டு கால வாழ்க்கையை போரிலேயே கழித்த அரசன் தன் வாழ்க்கையை அனுபவிக்காமல் இறந்து போகிறான்.

    இதற்கு முந்தைய நுண்மொழியில் ஒருவன் நித்தியத்திற்கான பாதை இத்தனை எளிதானதா என்று வியக்கிறான்.  ஏனென்றால், அவன் இறங்கு பாதையில் பயணித்தான் என்கிறார் காஃப்கா.

    பனிரெண்டு ஆண்டுகால போர் பயணத்தில் அலெக்சாண்டர் வழியெல்லாம் பல நாட்டு படைகளுடன் போரிட்டு, ரத்தம் சிந்தி, தனது படையிலும் இழப்புகளை சந்தித்து, வெற்றியென்றாலும், சிரமத்திற்குள்ளாகி பயணம் தொடர்கிறான்.  அவன் போரஸ் மன்னனிடம் தோல்வியடைந்து திரும்பியதாகவும் குறிப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள்.  அவன் மேலும் கிழக்கு நோக்கி பயணிக்காமல் திரும்பியதற்கு சில காரணங்கள்; அவனுக்கு செல்லும் பாதையின் புவியியல் தெரியவில்லை, கடந்த இடங்களின் தட்பவெப்பம் தெரியவில்லை.  மாசிடோனிய வீரர்களுக்கு இந்திய எல்லையிலிருந்த அடர்ந்த காடுகள் பழக்கமில்லை.  மரப்பாலங்கள் அமைத்து ஆறுகளை கடக்க செய்த முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் சொல்கிறார்கள்.  ஆகவே, ஹெலஸ்பாண்ட்நதியை, தன் சோர்ந்த கால்கள் காரணமாக, அவன் கடக்கவில்லை என்கிறார் காஃப்கா.  அவன் போரிட்டு முன்னேறிய வழி மிகக் கடினமானது.  ஆனால், அவன் திரும்பிச் சென்ற வழி, இந்திய வியாபாரிகள் செல்லும் வழக்கமான எளிய வழி. திரும்பச் சென்ற வழியில் அவன் இறந்து போனதால் அவன் தனது நிரந்தர அமைதியை அடைந்தான் என்று எடுத்துக் கொள்ளலாம்.

    அலெக்சாண்டரின் நீண்ட பயணத்தை எடுத்துக்காட்டாக வைத்துக் கொண்டு, இந்த இரண்டு நுண்மொழிகளைச் சொல்கிறார் காஃப்கா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29