காஃப்கா நுண்மொழி-38

காஃப்கா நுண்மொழி-38


    நித்தியத்தை அடைவதற்கான பாதை இத்தனை எளியதா என்று ஆச்சரியப்பட்டான் ஒருவன்.  ஏனென்றால், அவன் மலையிறக்கப் பாதையில் வேகமாய் பயணித்திருந்தான்.

என் எண்ணம்:

நித்தியம் என்றால் என்ன?

நம்மில் பலர் சில இரங்கல் கடிதங்கள் எழுதியிருப்போம்.  அவற்றில், “I pray to God to rest his peace at eternal peace” என்பது ஒரு சொற்றொடர்.  இந்த eternal peace நிரந்தர அமைதியை குறிக்கிறது.

நிலையாமையை பேசும் நமது தத்துவங்கள் தான் நித்தியத்தையும் பேசுகின்றன.  இம்மையில் இருக்கிற நிலையாமை என்பது நிதர்சனம்.  ஆன்மீகத்தில் நித்தியம் குறித்த நம்பிக்கை இருக்கலாம்.  பொதுவாக ஒரு நடப்பு சாத்தியமுள்ள வாழ்வியல் முறையில் நித்தியம் என்பது ஒரு மாயை தான். நமது கடிகாரங்களாலும், நாட்காட்டிகளாலும் கணக்கிடப்பட முடியாதது நித்தியம் என்கிறார்கள். என்னை பொறுத்தவரையில், அனுபவ பூர்வமாக, பொருள் புரிந்துஇதுதான் நித்தியம்என்று என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.  நித்தியம் என்கிற மாயையை உணர்ந்து கொண்டவர்கள் யாராவது இருக்க முடியுமா என்ன?  அது கடவுளை உணர்ந்து கொண்டேன் என்று சொல்வது போலத்தான்.

சரி, நித்தியம் என்ற ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டு மேலே பார்க்கலாம்.  அந்த நித்தியத்தை அடைவதற்கான பாதை எளிதாக இருப்பதாகவும், அது மலை இறங்கு பாதை என்றும் சொல்கிறார் காஃப்கா.  ஒரு மலையிலிருந்து இறங்கும் போது எளிதாகத் தான் இருக்கிறது.  நித்தியத்தை நோக்கிச் செல்லும் பாதை எப்படி இறங்கு பாதையாக இருக்க முடியும்?  ஒரு மோட்சத்திற்கான பாதை மனித ஆன்மாவிற்கு மேல் நோக்கிச் செல்லும் பாதையாகத்தானே இருக்க முடியும்?  (high above daily trifles). இந்த வாழ்வின் துன்பங்களை மலையேற்றம் போல் சிரமங்கள் நிறைந்ததாகவும், நித்தியத்தை தேடி திரும்பிய பிறகு மலையிறக்கம் போல் எளிதாகவும் இருப்பதாக கூறுகிறாரா?  நுண்மொழி-30ல் ‘நன்மை’ ஒரு வகையில் வசதியற்றது என்கிறார்.   அப்படியானால் நித்தியத்திற்கான பாதை எளிதாக இருப்பதால் அது ‘தீமையான’ பாதையா?  அல்லது நித்தியத்தில் ‘நல்லது’ ‘கெட்டது’ இருக்கிறதா?

    இப்படி அனுமானித்துக் கொள்ளலாம்; ஒரு மனிதன் நித்தியத்தை நோக்கி பயணிக்கத் தொடங்குகையில், முற்றும் துறந்து இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுபடத் தொடங்குகிறான்.  அவன் தனது சுமைகளை ஒவ்வொன்றாக இறக்கி வைக்கத் தொடங்கும் போது பயணம் எளிதாகவும் இறங்கு முகமாகவும் உள்ளது என காஃப்கா சொல்லியிருக்கலாம்.

இதற்கு முந்தைய நுண்மொழிகளில், சருகுகளால் மூடப்படும் பாதையையும், செங்குத்து மலைகளில் ஏறும் போது ஏற்படும் சறுக்குதல்கள் பற்றியும் கூறியிருக்கிறார்.  நுண்மொழி-5ல்ஒரு எல்லைக்கோட்டிலிருந்து திரும்புதல் என்பது கிடையாது.  அதுவே அடையப்பட வேண்டிய எல்லைஎன்கிறார்.

    அந்த எல்லைக் கோட்டை அடைந்த பின் நித்தியத்திற்கான பாதை எளிதாக இருக்கும் என்று சொல்கிறார் போலும்.  ஆனாலும்இறங்கு முகம்என்கிற புவியியல் உருவகத்திற்குப் பொருள் பிடிபடவில்லை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29