சாபம்

சாபம்

எப்போதோ வரப்போகும்
பேருந்திற்காய் 
ஒற்றைச் சாலையில்
காத்திருக்கும்
ஓரத்து டீக்கடையில்
சலனமற்றுப் படுத்திருக்க
ஆசை.

துரத்தும் வேலைகள் இன்றி
அரிக்கும் நினைவுகள் இன்றி
மயக்கும் கனவுகளும்
இன்றி
வெற்றிடத்தில்
வெறுமனே கிடக்க
ஆசை.

பயணிகள் வருகைக்கு
காத்திருக்கும் கடைக்காரனும்
கரியடுப்பில் காத்திருக்கும்
நீருபூத்த நெருப்பும் போல்;

காய்ந்த தளைகளை
அசை போட்டு
ஓய்ந்திருக்கும் கிடைபோல்

அவசரமின்றி அரவமின்றி 
எதையோ தேடிக்கொண்டிருக்கும்
காத்தைப் போல்

சுடாமலும் குளிராமலும்
பொட்டலில் அமர்ந்திருக்கும்
வெயில் போல்

வெயிலோடு நானுமிருப்பேன்
என்பதுபோல்
தவமிருக்கும் பனைபோல்

நான் வேறில்லை என
அதுகளோடு அதுகளாகி
அங்கிருக்க ஆசை.

அறுவது வினாடிகளில்
எழுவது முறை துடிக்க
எனை ஏன் சபித்தாய்
இறைவா !

சீராளன் ஜெயந்தன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29